பாதையிது பாதையிது
சிலுவைப் பாதையிது
மணிமுடி வேந்தன் முள்முடி தாங்கி
கல்வாரி பயணம் போகின்றார்
1.நீதி கண்மூட ஞாயம் தலைசாய்க்க-மனுமகன்
மரணத் தீர்ப்பானார்
உலகின் பாவம் போக்கும் செம்மரி-தாமே
பலிக்குத் தயாரானார்
ஓ மானிடா ஓ மானிடா
நான் படும் துன்பம் எதற்காக
என் தெய்வமே என் தெய்வமே
நீர் படும் துன்பம் எமக்காக
2.கழுமரம் சுமந்து கசையடி ஏற்று
கண்மணி போல் இன்று போகின்றார்
கயவர் கூட்டம் ஏளனம் செய்ய
கலங்கியே சிலுவை சுமக்கின்றார்
3.கால்கள் தளர சிலுவை அழுத்த
நாதன் தரையில் விழலானார்
பாவி மனிதன் பாவம் போக்க
பரமன் மண்ணில் மனுவானார்
4.நாடித்துடிக்க நெஞ்சு வெடிக்க
அன்னை மகனை பார்த்து நின்றார்
அன்பு மகனின் நிலையைக் கண்டு
வியாகுலம் உருகிநின்றார்
5.இயேசுவின் இலட்சியம் நிறைவேறிடவே
சீமோன் சிலுவை சுமக்க வந்தார்
துன்ப வேளையில் பிறருக்கு உதவும்
பாடத்தை நமக்கு கற்றுதந்தார்.
6.குருதி வழியும் முகம்தனை துடைக்க
வெரோணிக்கா துணிந்து முன்வந்தாள்
துடைத்த உடனே அவர் திருவதனம்
துணியில் பசுமையாய் பதியக்கண்டார்
7.இரண்டாம் முறையாய் தரையில் விழவே
சேவகர் அடித்து உதைத்தனர்
இலட்சிய சிகரத்தை அடைவதற்காக
சுமையை சுகமாக்கி எழுந்து நின்றார்
8.எருசலேம் பெண்கள் அழுவதைக் கண்டு
ஆறுதல் அவர்க்கு நல்கிசென்றார்
எனக்காய் அழவேண்டாம் உங்களுக்காய் அழுங்கள் என்று
புதிய வேதம் சொல்லித்தந்தார்
9.இலட்சிய பாதையில் தடைகல்லாக
மூன்றாம் முறையாய் கீழ்விழுந்தார்
தடைகளை உடைக்க தரணியை மீட்க
தாமே மீண்டும் எழுந்து நின்றார்
10.அகிலம் மீட்ட ஆண்டவர் இன்று
ஆடையை களைய நின்றார்
மாந்தர் மானம் காக்க இன்று
தன்மானம் களைந்து முன்நின்றார்
11.கள்வனைப் போல் இன்று கழுமரத்தில்
ஆணி அடித்து நிறுத்தினர்
அன்பை விதைத்த அன்பரின் காலையும்
கையையும் ஆணி துளைத்தது
12.வானம் இருள பூமி நடுங்க
ஆதவன் அன்றே உயிர்துறந்தார்
இலட்சிய பயணம் நிறைவு பெறவே
தந்தையிடம் ஆவியை ஒப்படைத்தார்.
13.மழலை இயேசுவை தாலாட்டிய மடியில்
மரித்த மகனை தாய் சுமந்தார்
சொல்லெண்ணா துயரம் நெஞ்சை அடைக்கும்
வீரத்தாய் துணிந்து நின்றார்.
14.மரித்த மீட்பர் திருவுடலை
இரவல் கல்லறையில் வைத்தனர்
உலகின் செல்வங்கள் நிலையற்றதென்பதை
உலகோர் யாவரும் உணரச் செய்தார்.
0 Comments