சிலுவைப் பாதை





தந்தை மகன் தூயஆவியின் பெயராலே –ஆமென்


உத்தம மனஸ்தாப செபம்:
சர்வேசுரா சுவாமி, தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன்.
இப்படிப்பட்ட தேவரீருக்கு பொருந்தாத பாவங்களை செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன். எனக்கிதுவே மனஸ்தாபமில்லாமல் வேறு மனஸ்தாபமில்லை எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை இனிமேல் ஒருபொழதும் இப்படிபட்ட பாவங்களைச் செய்வதில்லையென்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்கு பலன் போதாமையால் இயேசுநாதர்சுவாமி பாடுபட்டுச் சிந்தின திருஇரத்தப் பலன்களை பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து, எனக்கு உமது வரப்பிரசாதத்தையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கின்றேன். திருச்சபை விசுவசித்து கற்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன் - ஆமென்.




முன்னுரை:
புரட்சியாளர்கள் புதைக்கபடுவதில்லை மாறாக  விதைக்கப்படுகிறார்கள். இது ஒரு புரட்சியாளனின் பாதை. சமூக அவலங்களையும், சமய கட்டுகளையும் தகர்த்தெறிந்தவர், அன்பை மட்டுமே இலக்காக கொண்டவர், மக்கள் பாவம் போக்க வந்த இறைவனின் செம்மறி, மனிதனாக பிறந்து பாவத்தை தவிர மற்றனைத்திலும் மனிதனாக வாழ்ந்தவர். இவையனைத்தும் செய்த இயேசுவுக்கு நாம் கொடுத்ததோ சிலுவை மரணம்.

ஈராயிரம் வருடங்களுக்கு முன் சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசு,  வரலாற்றை இரண்டாக பிரித்துபோட்டார். இயேசுவை ஒரே  ஒருமுறைதான் கள்வர்களும் யூதர்களும் சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் இன்று ஒவ்வொரு நாளும்  நம் பாவங்களால் இயேசுவை சிலுவையில் அறைகிறோம்.ஓ மனிதா என்று நீ திருந்துவாய்? எப்போது மனம்திருந்தி திரும்பி வருவாய்? இதுவே தகுந்த காலம். மனம் மாறிடு, மன்னித்து வாழ், என்னோடு  பயணித்து மனமாற்றம் பெறு.












முதலாம் நிலை
இயேசுவைசிலுவைச்சாவுக்குதீர்வையிடுகிறார்கள்
         பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள்,மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர் அவரைக் கட்டி இழுத்துச்சென்று ஆளுநன் பிலாத்துவிடம் ஒப்புவித்தனர். பிலாத்து “இவன் செய்த குற்றம் என்ன? என்று கேட்டான். அனைவரும் சிலுவையில் அறையும் என்று பதிலளித்தனர். கலகம் உருவாக கண்டு பிலாத்து கூட்டத்தினர் முன்னிலையில் தண்ணீரை எடுத்து இவனது இரத்தப்பழியில் எனக்கு பங்கில்லை நீங்களே பார்த்தக்கொள்ளுங்கள் என்று கூறித் தன்கைகளை கழுவினான். இயேசுவை கசையால் அடித்து சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
“எந்த அளவையால் நீங்கள் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்”
பிறரை தீர்ப்பிடுவதற்கும், அன்பு செய்வதற்கும், நீதி, நியாயம் பேசுவதற்கும், தன்னையே முதலில் நீதிபதியாகவும், குற்றவாளியாகவும் பாவித்துப் பாhர்க்கச் சொன்னவர் இயேசு. எல்லாருமே தாங்கள் குற்றவாளியாக இருக்கும் போது தீர்ப்பு சாதகமாக அல்லது தண்டனை குறைவாகவோ இருக்க வேண்டுமென எதிர்பார்கிறார்கள். ஆனால் தாங்கள் நீதிபதியாக இருக்கும் போது மற்றவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வாரி வழங்குகிறார்கள்.

சிந்தனை:
மனிதா! சிந்தித்துப் பார். நீ நீதிபதியாக இருந்து எத்தனை பேரை தண்டித்திருக்கிறாய்? குற்றவாளியாய் இருந்து எத்தனை முறை தண்டனையிலிருந்து தப்பித்திருக்கிறாய்?

செபம்:
ஆயிரமாயிரம் அநீதித் தீர்ப்புகள் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கின்ற இப்பாருலகில், அநீதியைக் கண்டு இதுதான் உலக நியதி என்று ஒதுங்காமல், இறைவா நீர் தந்த இதயம் எங்களில் இயங்கும்வரை ஓங்கி குரல் கொடுக்கும் மனத்திடனை எங்களுக்கு தாரும்.







இரண்டாம் நிலை

இயேசு சிலுவை சுமக்கிறார்:

ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படை பிரிவினர் அனைவரையும் அவர் முன் ஒன்றுகூட்டினர் அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின் மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலை கொடுத்து அவர்முன் முழந்தாள் படியிட்டு, யூதரின் அரசரே, வாழ்க! என்று சொல்லி ஏளனம் செய்தனர். அவர் மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர் அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரை சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.
“உண்மையை எடுத்துரைப்பதே என் பணி”
நீ யாரென்று தெரிந்து கொண்டே கேள்வி எழுப்பிய, பிலாத்துவுக்குஇயேசு உரைத்த அருமையான வார்த்தைகள் தான் இது. தான் குற்றவாளி அல்ல என்ற உண்மையை இயேசு சிலுவை சுமந்து அறிவிக்கிறார். இன்றும் பல நிரபராதிகள் சிறைக்கம்பிகளுக்குள் இருந்து கொண்டு தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று முழங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த குரல் உங்களுக்கு கேட்கிறதா? கேட்கிறது என்றால் நாம் உண்மைக்கு வெகு தூரத்தில் இல்லை.

சிந்தனை:
இன்றைக்கு நாம் எத்தனை அப்பாவி மக்கள் மீது இல்லாத  பொல்லாத பழிகளைச் சுமத்தி அவர்களை அவமானப் படுத்தி அவர்கள் முதுகில் எந்தெந்த விதத்தில் எல்லாம் எத்தனை சிலுவைகளைச் சுமத்தியிருக்கிறோம்.
செபம்:
இந்த அகிலத்தில் உம் சிலுவையின் பாரம் கண்டு வருந்தும் நாங்கள், எங்களோடு வாழும் மனிதர் தம் தோள்களில் சிலுவைகள் சுமத்தப்படாமல் இருக்க, எங்களால் இயன்றதை இன்முகத்துடன் செய்;ய உறுதியான மனதை தாரும் இறைவா!








மூன்றாம் நிலை:

இயேசு முதல் முறை கீழே விழுகிறார்

என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது. அவை பிணைக்கப்பட்டு என் கழுத்தை சுற்றி கொண்டன அவர் என் வலிமையை குன்றச்செய்தார்.நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார். இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன் என் இரு கண்களும் கண்ணீரை பொழிகின்றன. உயிரைக் காத்து ஆறுதல் அழிப்பவர் எனக்கு வெகு தொலைவில் உள்ளார்.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”என்றார் இயேசு.
சிலுவையின் பாரம் ஒரு புறம், தன்னைச் சுற்றி வேடிக்கை பார்த்த மக்களுடைய வார்த்தைகளின் பாரம் மறுபுறம். வாழ்வில் வருகின்ற வேதனைகள் எல்லாம் தூசுகளாக இருக்கும், தன்னை நம்புவோர் உடனிருந்தால்….ஆனால், தன்னை எவருமே நம்பவில்லை என்றால் கடுகளவு வேதனைகூட இமயமலையாகத்  தோன்றும்.
சிந்தனை:
உடல் களைப்பு இயல்பானது. விரைவில் களைப்பை மாற்றிவிடலாம். ஆனால் உள்ளத்தை ஊனமாக்குதல் பயனற்றது. உள்ளச் சுமைகளை யார் மீதும் சுமத்தாமல் இருப்போமா?
செபம்:
அன்பு இயேசுவே! நாங்கள் பாவத்தில் விழும்போதெல்லாம், வீழ்ந்துவிட்டோமே என்ற குற்ற உணர்விலே எங்கள் இதயங்களை வருத்திகொள்கின்றோம். வீழ்வதுதான் எழுவதற்கான வாய்ப்பை தரும் என்றெண்ணி தன்நம்பிக்கையோடும், இறைநம்பிக்கையோடும் எழுந்து நடந்திட எங்களுக்கு அருள் தாரும்.









நான்காம் நிலை:

இயேசு தனது தாயை சந்திக்கிறார்
மகளே! எருசலேம் உன் சார்பாக நான் என்ன சொல்வேன் உன்னை நான் எதற்கு ஒப்பிடுவேன் மகள் சீயோனே கண்ணி பெண்ணே! யாருக்கு  இணையாக்கி தேற்றுவேன் உன்னை?
உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னை குணமாக்க யாரால் முடியும்? அவ்வழியாய் கடந்து செல்வோர் உன்னை பார்த்து கை கொட்டி சிரித்தனர்! மகள் எருசலேமை நோக்கி தலையை ஆட்டிச் சிழ்க்கையடித்தனர் அழகின் நிறைவும் மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா என்றனர்.
“உம்மைக் கருத்தாங்கி பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்”
இவ்வார்த்தைகளை விட ஒரு தாய்க்கு பெருமகிழ்ச்சி தரக்கூடிய செய்தி வேறொன்றும் இல்லை. இதே வார்த்தைகளை சொல்லிய நாக்கு தான் அவனை சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் என்று முழங்கின. இயேசு தன்னை இறைபணிக்கென அர்பணித்த அன்பு தாயை கூர்ந்து நோக்கினார் அந்த தியாக தாயின் திருமுகம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பயணத்தை எளிதாக்குகிறது. நிச்சயம் இந்த தாய் தனது மகனுக்காக அழுதிருக்மாட்டார். தனது மகனை ஏற்றுக்கொள்ள தயங்கிய மக்களுக்காக தான் அந்த தாய் அழுதிருப்பார்.
சிந்தனை:
இன்றைக்கு தாய்க்கு சமமாக நடத்த வேண்டிய பெண்களின் நிலை எப்படி உள்ளது? தாய் என்ற ஸ்தானம் நம்மை பெற்றவளுக்கு கொடுக்கிறோமா? தியாக உணர்வுடன் தம்மை அர்பணித்த அந்த அன்னை மரியாளின் வாழ்கையை நாம் பின்பற்ற முன்வர வேண்டாமா? 
.செபம்:
அன்பு அன்னையே உம் திடமூட்டும் சந்திப்பு எம் அனைவருக்கும் ஒரு பாடம். உமது சந்திப்பில் காணப்படும் பாடங்களை எங்கள் வாழ்வில் கடைபிடிக்கவும் வாழ்ந்துகாட்டவும் அருள்தாரும்.






ஐந்தாம் நிலை

இயேசுவின் சிலுவையை சுமக்க சீமோன் உதவுகிறார்
அவர்கள் இயேசுவை இழுத்து சென்றுகொண்டிருந்தபொழுது சீரேன் ஊரை சேர்ந்த சீமோன் என்பவர் வயல் வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரை பிடித்து அவர் மேல் இயேசுவின் சிலுவையை வைத்து அவருக்கு பின் அதை சுமந்துகொண்டு போகச்செய்தார்கள். பின்பு இயேசு தம் சீடரை பார்த்து தன்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்நலம் துறந்து தன் சிலுவையை தூக்கிக் கொண்டு என்னை பின்பற்றட்டும் என்றார். இயேசு, நான் கனிவும் மனதாழ்மையும் உடையவன் ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல்கிடைக்கும் ஆம் என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாய் உள்ளது என்றார்.
“நீங்கள் தருமம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாதிருக்கட்டும்”
இந்த உலகம் ஏன் இன்னும் அழியாமல் இருக்கிறதென்றால் தமக்கென வாழாது பிறருக்கென வாழும் உயர்ந்த மனிதர்கள் இருப்பதால் தான் என சங்க கால பாடல்கள் எடுத்தியம்புகின்றன.
ஆண்டவர் இயேசு மனுகுலம் வாழ வேண்டும் என்பதற்காக சிலுவை சுமக்கிறார்.அவரின் இந்த பார சிலுவையை சுமப்பதற்கு சீரேன் ஊரைசேர்ந்த சீமோன் உதவி செய்கிறார். தனக்கேன் இந்த வம்பு என்று விலகி செல்லலாமல் முன் வந்து ஆண்டவருக்கு உதவி செய்ததால் இன்றளவும் நினைக்கப்படுகிறார். எனவே தேவையில் இருக்கக்கூடிய யாருக்காவது நாம் நம்மையே இழக்கத்துணிகிறோம் என்றால் நமது வாழ்வு பிறருக்கு கலங்கரைவிளக்கமாக இருக்கும். பலரும் நமது ஒளியில் பயணம் செய்வர்.
சிந்தனை:
மண்ணில் வாழ்வாங்கு வாழ்வதற்கு சில வழிமுறைகள் உண்டு அவற்றை பின்பற்றுவதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும். தேவையில் இருப்பவருக்கு தாமாக சென்று உதவுவது அதில் ஒன்று.
செபம்:
எங்களுக்கும் உதவும் நல்ல மனநிலையை நீர் தந்துள்ளீர் இறைவா எனினும் தேவையை அறிந்து நாங்களாகவே முன்வந்து துன்புறும் ஏழையின் துயர்துடைக்கும் நல் மனதையும் “சின்னஞ் சிறியோருக்கு செய்தபோதெல்லாம் உமக்கே செய்தோம் என்ற நினைப்போடு வாழவும் வரம் தாரும். ஆமென்





ஆறாம் நிலை:

வெரோணிக்கா இயேசுவின் முகம் துடைக்கிறார்.
நேர்மையாளர்கள் “ஆண்டவரே,நீர் எப்பொழுது பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராக கண்டு உமது தாகத்தை தணித்தோம். எப்பொழுது உம்மை அன்னியராக கண்டு ஏற்றுக்கொண்டோம்.அல்லது ஆடை இல்லாதவராக  கண்டு ஆடை அணிவித்தோம், எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக்கண்டு உம்மைத்தேடி வந்தோம்?” என்று கேட்பார்கள். அதற்கு அரசர், மிக சிறியோராகிய என் சகோதர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே  செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்சொல்கிறேன்” எனப் பதிலளித்தார்.
“ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? ஊயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?”ஓய்வுநாள் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கும் உறவை ஆழப்படுத்தவே முறைப்படுத்தப்பட்டது. ஆனால் அதுவே ஒரு சட்டமாக மாறி மக்களை அடிமைப்படுத்துதாக மாறிய சூழலில் தான் இயேசு இக்கேள்வியை எழுப்புகிறார்.
சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனிதருக்கு கிடைக்கும் நன்மையைத் தடைசெய்யுமாயின் அவைகளை மீறுவதில் தாமதம் செய்யக்கூடாது. செய்வதும் முறைமையும் ஆகாது.வெரோணிக்கா சடங்குகளும் சம்பிரதாயங்களும்தன்னைத் தடைசெய்வதை மீறி பாதிக்கப்பட்ட இயேசுவின் முகம் துடைக்கப் புறப்படுகிறார்.
சிந்தனை:
எல்லா நேரமும் எல்லா நாளும் நன்மை செய்வதற்கே தரப்பட்டுள்ளன. நன்மைகளைச் செய்து நமது வாழ்நாளை நீட்டித்துக் கொள்கிறோமா? அல்லது நன்மை செய்வதற்கு  நாளும் கிழமையும் பார்க்கிறோமா?
செபம்:
வெரோணிக்காவின் மனநிலை எங்கள் வாழ்வில் பிரதிபலித்தால், கண்டிப்பாக இவ்வுலகம் உருமாறிவிடும் என்று ஆசைப்படுகிறோம், துன்புறும் மனிதர்களில் நீர்தாமே சிலுவை சுமக்கிறீர் என்று உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்ய அருள்தாரும் -ஆமென்





ஏழாம் நிலை:

இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்
அவர் இகழப்பட்டார் மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் நோயுற்று நலிந்தார் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார் அவரை நாம் மதிக்கவில்லை மெய்யாகவே அவர் நம் பிணிகளை தாங்கி கொண்டார் நம் துன்பங்களை சுமந்து கொண்டார் நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரே நம் குற்றங்களுக்காக காயமடைந்தார் நம்தீச்செயல்களுக்கு நெறுக்கப்பட்டார் நமக்கு நிறைவாழ்வை அழிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர் தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
“வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள் அதன் பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்மை எடுக்க உங்களுக்கு தெளிவாய் கண்தெரியும்”
என்றுஆண்டவர் இயேசு கூறுவது இதனாலே தான் தவறுகள் செய்தவருக்குதான்தவறு செய்யாது வாழ்வது எப்படி என்பதும், மீண்டும் அத்தவறை செய்யாமலிருப்பதுஎப்படி என்பது தெரியும். எனவே தவறுசெய்துவிட்டோம், இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கதி கலங்கி விழி பிதுங்கி நிற்பதை விட அடுத்தகட்ட வாழ்விற்கு இதுவும் நம்மை விட்டு கடந்து போகும் என்ற மனநிலையில் தயாராக வேண்டும்.
சிந்தனை:
தவறுகளின் புதைகுழியில் நாம் சரிந்துபோக வண்ணம் மீண்டும் எழுந்து நடக்கும் மன ஆற்றலை பெறவேண்டும். பாவக்குழியில் விழுந்த நாம் எழுவது எப்போது?
செபம்:
அன்பு ஆண்டவரே எங்கள் வாழ்வில் நாங்கள் பாவத்தில் விழும்போது அல்லது தோல்வியுறும்போது தொடர்ந்து நடைபோட மனமின்றி மடிகின்றோம் தொடர்ந்து நடைபோடும் துணிச்சலான மனதிடனை எங்களுக்கு தாரும் ஆமென்




எட்டாம் நிலை:

இயேசு எருசலேம் மகளிரை சந்திக்கிறார்
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப்புலம்பி ஒப்பாரிவைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி எருசலேம் மகளிரே நீங்கள்  எனக்காக அழவேண்டாம் மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காவும் அழுங்கள் என்றார். அதற்கு பவுல் மறுமொழியாக நீங்கள் அழுது ஏன்  என் உள்ளத்தை உடைக்கிறீர்கள்? நான் ஆண்டவர் இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல சாவதற்கும் தயார் என்றார்.
                மண்ணுலகில் தீமுட்ட வந்தேன் அது இப்பொழுதே பற்றியெரிந்துகொண்டிருக்கவேண்டும் என்பதே என் விருப்பம் மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள் இல்லை பிளவு உண்டாக்கவே வந்தேன். தந்தை மகனுக்கும் மகன் தந்தைக்கும் தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும் மாமியார் தன் மருமகளுக்கும் மருமகள் மாமியாருக்கும் எதிராக பிரிந்திருப்பர்”
இந்த இறைவாக்கு எருசலேம் பெண்களிலே நிறைவேறுவதை பார்க்கிறோம் அவர்களுடைய குடுப்பத்தலைவர்கள் இயேசுவை சிலுவையில் அறைய வேண்டுமென்று கூக்குரல் எழுப்பினார்கள் அவர் சிலுவையில் மரிக்கபோகிறாரே என்று செல்லி அவர்களுடைய மனைவியர் கண்ணீர் வடிக்கின்றனர்.
இயேசு தனது வாழ்வில் எதிர்க்கப்படும் அறிகுறியாக ஏற்றுக்கொள்ள முடியாத சக்தியாக , பிளவுப்படுத்தும் ஆற்றலாக இருந்திருக்கிறார். இயேசுவை குழந்தையாக ஆலயத்தில் அர்ச்சிக்கும் போது சிமியோன் கூறிய அருள் வாக்கு இயேசுவின் வாழ்நாள் முழுவதும் தொடர்வதை பார்க்கின்றோம்.

சிந்தனை:ஆறுதல் பெறுவதை விட பிறருக்கு ஆறுதல் தரவும் என்னை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விட நான் பிறரை புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று நினைக்கின்றேனா?

செபம்:  துன்புறுவோரின் துயர்துடைக்கும் இயேசுவே! எருசலேம் நகர பெண்களுக்கு நீர் கூறிய ஆறுதல் மொழிகள் உண்மையாகவே எங்கள் இதயங்களை தொடுகின்றன. எங்கள் வாழ்வில் நாங்கள் கூறும் ஆறுதல்மொழிகளும் எங்கள் உடன்வாழும் மனிதர்களுக்கு முழுமையான ஆறுதலைத்தரும் அருள்தாரும். ஆமென்




ஓன்பதாம் நிலை:

இயேசு மூன்றாம் முறையாக கீழே விழுகிறார்:
இறiவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் என்னைக் காப்பாற்றாமலும் நான் அழுது சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகுதொலைவில் இருக்கின்றீர். ஆண்;டவரே உமது பேரிரக்கத்தை எனக்கு காட்ட மறுக்காதேயும் உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னை பாதுகாப்பனவாக! ஏனெனில் எண்ணிறந்த தீமைகள் எனைசூழ்ந்து கொண்டன என் குற்றங்கள் என்மீது கவிழ்ந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை என் உள்ளம் தளர்ந்து என்னை கைவிட்டது. ஆண்டவரே என்னை விடுவிக்க மனமிசைந்தருளும் ஆண்டவரே எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.
            விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை கூடியிருந்த எல்லோரும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கல்லால் எறிய வேண்டும் என்றபோது தவறு செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் என்றார் இயேசு.
             தான் செய்த பாவத்திற்காக மனம்வருந்திய சக்கேயு தனது சொத்தை பிரித்துக்கொடுத்து பரிகாரம் செய்கின்றேன் என்றபோது அவரை ஏற்றுக்கொள்கிறார்கள். தனது சகோதரருடைய குற்றங்களை எத்தனை முறை மன்னிப்பது என்று கேட்கும் போது கணக்கற்ற முறையில் என்கிறார்.
இயேசுவைப் பொறுத்தவரையில் தவறி விழுவது இயல்பு மீண்டும் பழைய நன்நிலைக்கு திரும்பி வர வேண்டும் அது தான் இயேசு மூன்று முறை சிலுவைப் பாரத்தோடு; கீழே விழுந்து மீண்டும் எழுந்து நடப்பதன் மூலம் நமக்கு சொல்லும் செய்தி.
சிந்தனை:
         வாழ்வில் வீழ்வதும் மீண்டும் எழுவதும்  இயல்பு வீழ்ந்தே கிடப்பது தான் தவறு. நான் பாவத்தில் விழுந்ததோடு மடடுமல்லாமல் என்னுடன் இருப்பவர்களும் பாவத்தில் விழ காரணமாக இருக்கின்றேனா?
செபம்:
           எங்கள் அன்பு ஆண்டவரே! நாங்கள் எங்கள் வாழ்வில் பாவங்களில் விழுந்து கிடக்காமல் துணிந்து எழுந்து செயல்பட வரம்தாரும் -ஆமென்




பத்தாம் நிலை:

இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள் 
இயேசுவை சிலுவையில் அறைந்தபின் படைவீரர்கள் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாக பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக்கொண்டார்கள். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது எனவே அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, அதை கிழிக்கவேண்டாம் அது யாருக்கு கிடைக்கும் என்று பார்க்க சீட்டுகுலுக்கி போடவேண்டும் என்றார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப்போட்டார்கள் என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.
“நரிகளுக்குப் பதுங்குக்குழிகளும், வானத்துப்பறவைகளுக்கு கூடுகளும் உண்டு மானிட மகனுக்கோ தலைசாய்க்ககூட இடமில்லை”
கல்லறை மேடுகளில் சுயநினைவில்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த மனிதனை சந்தித்து உரையாடி அவனுக்கு ஏற்பட்டிருந்த மனநலக்குறைவை போக்குகிறார். ஆடை அணிவித்து நலமான மனிதராக மற்றவர் முன்னால் அறிமுகப்படுத்துகிறார். தொழுநோயால் பாதிக்கப்பட்டு மனித மாண்பை இழந்திருந்த பத்து பேருக்கும் மாண்போடுகூடிய மண்ணக வாழ்வை பெற்றுத்தருகிறார். தனது காலடியில் அமர்ந்து நறுமணத்தைலத்தால் தன்னை அர்ச்சித்த பெண்ணுக்கு மன்னிப்பு வாழ்வைத் தந்தார்.இப்படி தன்னை நம்பியவருக்கு எல்லாம் இயேசு மகிமை என்னும் ஆடையைத் தந்தார் ஆனால் சிலுவை மரத்தில் இயேசு ஆடையற்ற நிர்வாணியாய் அறையப்படுகிறார்.
சிந்தனை:
ஆடையில்லாத நிர்வாணம் சங்கடத்திற்கு உரியது. ஆனால், மனித மனநிலை இல்லாத நிர்வாணம் அனுதாபத்துக்குரியது. மாண்பு என்னும் ஆடை எல்லோருக்கும் உரியது. 
செபம்:
எமக்காய் ஆடைகள் களையப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட  அன்பு இயேசுவே! நாங்கள் எங்கள்வார்த்தைகளால் பிறரை அவமானப் படுத்தாமல் வாழவும் அவமானப்படுத்தப்படுவோருக்கு ஆறுதல் அழிப்பவர்களாக வாழவும் வரம்தாரும். ஆமென்




பதினொன்றாம் நிலை:

இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்:
 பிலாத்து இயேசுவைச்சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான் அவர்கள் இயேசுவை தம் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார்கள். இயேசு சிலுவையை தாமே சுமந்து கொண்டு மண்டைஓட்டு இடம் என்னும் இடத்திற்கு சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவையில் அறைந்தார்கள் அவ்விருவரையும் இருபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்றஅறிக்கை ஒன்றை எழுதி அதை சிலுவையின் மீது வைத்தான். அதில் நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் என்று எழுதியிருந்தது. சிலுவை அருகில் இயேசுவின் தாயும் தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும் மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.
“தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆணடவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்”; தனது வாழ்வின் செல்வமாக இயேசு கொண்டது தனது பன்னிரு சீடர்களைத்தான். அவர்கள் தான் ஆண்டவர் இயேசுவை முழுமையாகப் புரிந்திருந்தார்கள் ஆனால் சிலுவை மரத்தடியில் அவர்கள்கூட இயேசுவோடு இல்லை. இயேசு சிலுவையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவே தொங்குகிறார். மனித வாழ்வில் தனக்கு யாருமே இல்லையென்ற உணர்வை விட மிகக்கொடுமையானது எதுவும் இல்லை. தன்னை எல்லோருமே கைவிட்டுவிட்டார்கள் என்ற உணர்வு மரணத்தைவிட அதிகவலியைக் கொடுக்கும்.
               தனிமையில், யாருமற்ற அநாதையாய் நன்மைசெய்ததற்காக தண்டனை பெற்ற குற்றவாளியாய் மரணத்தோடு போராடுகின்ற நிலையில் இயேசு.
சிந்தனை:
எது வரினும், பிறர் வாழ்வை மேன்மைப்படுத்தும் பணிகளைச் தொடர்ந்தாற்ற வேண்டும். அந்நிலை எல்லாருக்கும் கிடைக்க நான் வழி செய்கின்றேனா?
செபம்:
ஆணிகளால் அறையப்பட்ட அன்பு இயேசுவே பிறரை எங்கள் அநியாயமான செயல்களால் சிலுவையில் அறையாமல் இருக்க வரம் தாரும். ஆமென்.




பனிரெண்டாம் நிலை:

இயேசு சிலுவையில் இறக்கிறார்:
நண்பகல் பனிரெண்டு மணிமுதல் பிற்பகல் மூன்றுமணி வரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்றுமணியளவில் இயேசு, ஏலி,ஏலி லெமா சபக்தானி”! அதாவது, என்னிறைவா, என்னிறைவா ஏன் என்னை கைவிட்டீர்” என்று உரத்தக்குரலில் கத்தினார். இயேசு மீண்டும் உரத்தக்குரலில் கத்தி உயிர்விட்டார்.நூற்றுவத்தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்த யாவற்றையும கண்டு மிகவும் அஞ்சி, இவர் உண்மையாகவே இறைமகன் என்றார்கள்.
“தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர் என் பொருட்டு தம் உயிரை இழப்பாரோ அதைக் காத்துக்கொள்வர்”;
இறப்பு, ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார் என்பதன் அடையாளம்.ஒரு
மனிதனுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்களின்
எண்ணிக்கையை வைத்து தான் அவர் மனிதர்களை
சம்பாதித்திருக்கிறார்களா? அல்லது பொருட்களை சம்பாதிருத்திருக்கிறாரா
என்பது புரியும். இயேசு சிலுவையில் உயர்விடுகிறார் மானிடகுலம்
வாழவேண்டும் என்பதற்காக தனது வாழ்வை திரியாக ஏற்றி
வைக்கிறார்.தன்னையே ஒளியென எல்லா கரங்களிலும் தந்துவிட்டு போகிறார்.
சிந்தனை :
பிறர் நலனுக்காக நமது வாழ்வை இழக்கிறோமா? நம்முடைய சுயமதிப்பு, கௌரவம் இவற்றை இழக்கத் துணிகிறோமா? தன்னலத்தை கடந்து பிறர்நலம் பேணும் மனத்தை எப்பொழுது பெறப் போகிறோம்?
செபம்:
உயிர் கொடுத்து உயிர் தந்த உன்னத இறைவா! சமூகம் வாழ நாங்கள் எங்கள் வாழ்வில், செல்வம், புகழ், பதவி இவற்றுள் எவற்றையேனும் இழக்க நேரிட்டால் உமக்காக அதை ஏற்றுக்கொள்ளவும், எங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்களை நாங்கள் உம்மை போல் மன்னிக்கவும் வரம் தாரும்.




பதிமூன்றாம் நிலை:

இயேசுவின் உடல் மரியாவின் மடியில்:
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின்சீடர்களுள் ஒருவர் யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்றுவெளிப்படையாககாட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின்  உடலைஎடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும்அனுமதி கொடுத்தார். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தைஎடுத்துக்கொண்டு போனார்.அவர் வெள்ளைப் போளமும் சந்தணத்தூளும் கலந்துஏரக்குறையமுப்பது கிலோ கிராம் கொண்டு வந்தார்கள். அவர்கள்  இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்;க முறைப்படி நறுமணப்பொருட்களுடன் துணிகளால் சுற்றிக்கட்டினார்கள்.
“கடவுளின் திருவுள்ளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் ஆவர்”. 
இயேசுவின் தாய் ஒரு சாதாரண பெண் அல்ல இறைத்திருவுள்ளத்திற்கு என்று தன்னை முழுமையாக அர்பணித்தவர் இயேசுவுக்கு கிடைத்ததாய் போல இன்றைக்கு வீரத்தாய் வேண்டும். சமூக உணர்வோடுதியாக மனப்பான்மையோடு இந்த சமூகம் மாற்றம்  பெற வேண்டும் என்ற மனநிலையில் தனக்கு கடவுள் கொடுத்த மகனை, அன்னை அதே மனப்பான்மையோடு வளர்த்தெடுக்கிறார் என்பது தான் உண்மை.
எனவே, இயேசுவை இவ்வளவு சீக்கிரம் இழந்து விட்டோமே என்றுதான்நிச்சயம் அன்னை வருந்தியிருப்பார். இன்னும் சிறிது காலம் ஆண்டவர் பணி செய்திருந்தால் இன்னும் எவ்வளவு மாற்றங்களை நிச்சயம் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், இப்படி அநியாயமாகக் கொன்றுவிட்டார்களேஎன்று அன்னை மரியாள் வருந்தியிருப்பார்.
சிந்தனை:
துன்பத்தில் துவண்டு வீழ்கின்ற போதும் அன்னையைப் போல இறைத்திருவுளத்தை அறிந்து அதன்படி நடக்க துணிகிறோமா? அன்னையைப் போல அமைதியாக வாழ்கின்றோமா?
செபம்:
    இயேசுவின் அன்னையும் திருச்சபையின் தாயுமாகிய எங்கள் அன்புஅன்னையே! நாங்கள் எங்களுக்கு ஏற்படும் துன்ப துயரங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளவும் பாவங்களை விட்டெளித்து தூய வாழ்வு வாழவும் வரம்தாரும். ஆமென்




பதிநான்காம் நிலை:

   இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்:
      அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவிற்கு ஆயத்தநாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தனர்.
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அத அப்படியேஇருக்கும். மடிந்தால் தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் எனஉறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”.
கோதுமை மணியாக மண்ணில் மடிகிறார். மீண்டும் முளைத்தெழுந்து பன்மடங்கு பலன்தருவதற்குத்  தன்னால் முடியும் என்பதை நிரூபிப்பதற்காக கல்லறைக்குள் தன்னை முடக்கிக் கொள்கிறார். தனக்கென வாழாது பிறருக்கென வாழ்பவர் எப்போதும் எதிர்கொள்வது புறப்பணிப்புகளும் ஏமாற்றங்களும்தான். ஆனால் மடியும்போது நிச்சயம் மனநிறைவோடு இருக்க முடியும் இறுதிவரை இலட்சியத்திற்காக வாழ்ந்தவர்கள் எப்போதும் தோற்றுப்போவதில்லை. தோற்றுப் போகிறவர்கள் இலட்சியவாதிகள் இல்லை.
சிந்தனை: 
       பாவச்சின்னமாய் கருதப்பட்ட சிலுவை புண்ணியர் இயேசுவால் புனிதச்சின்னமானது. அவர் நமக்குத் தேடிதந்த அரிய வாழ்வை நாம் எவ்வாறு காக்கப் போகிறோம்? அடக்கம் செய்யப்பட்ட இயேசுவோடு நமது பாவ சிந்தனைகளையும் அடக்கம் செய்வோமா?
செபம்;:
    கல்லறை சமத்துவத்தை கற்பித்த இயேசுவே! நாங்கள் எங்கள் வாழ்வில் எங்களோடு வாழும் அனைத்து மனிதர்களையும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், இறைவனின் சாயல் என்று ஏற்றுக்கொண்டு ஒருவர் மற்றவரை சமமாக மதித்து ஏற்றுக் கொண்டு அன்பு செய்து வாழ வரம் தாரும். ஆமென்.










Post a Comment

0 Comments